வாட்ஸப், சமூக ஊடகங்கள் இவற்றில் வலம்வரும் ஜோக்குகள், மீம்ஸ்கள் எல்லாவற்றிலும் கதாநாயகனாக உலாவருகிறவர் விஜயகாந்த் என்றால் அடிப்பீர்கள். இதில் உலாவருகிறவருக்குப் பெயர் கதாநாயகன் கிடையாது. காமெடியன்! சமூக ஊடகங்கள் பிரபலமான கடந்த இரண்டு ஆண்டுகளில் அதில் இயங்குகிறவர்களுக்குக் கிடைத்த ‘ எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடிய மகான்’ விஜயகாந்த்!
ஆனால் சமூக ஊடகங்கள் கொடுத்திருக்கிற இந்த சுதந்தரத்தை அதைப் பயன்படுத்துகிறவர்கள் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? ஒருவரின் அரசியல் தவறுகளை விமர்சிப்பது சரிதான். ஆனால் பிரச்னையைத் தாண்டி தனிமனிதராக அவரை கலாய்ப்பது என்ன நியாயம்?
“கேப்டனிடம் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் இந்த சமூக ஊடகங்களைக் கவனிப்பதே இல்லை. இதைப் பொருட்படுத்தவும் அவர் விரும்பவில்லை. பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவர் கோபப்படுவதைப் பற்றிக்கேட்டபோது வேண்டுமென்றே தன்னைச் சீண்டி தன் வாயைப் பிடுங்குகிறார்கள் என்று கூறினார். இதனால்தான் இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளின்போது அவரது அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்களை விடுவதே இல்லை. அவர் யோகா செய்த வீடியோவை ஊடகங்கள்கூட கிண்டலுக்குப் பயன்படுத்தியதை அவர் ரசிக்கவில்லை. மைக்கைப் பிடித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது சுழன்று சுழன்று பேசும் கேப்டன் இல்லை, இப்போது இருக்கிறவர். வயதுக்கு ஏற்ற உடல்நலப்பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் இது எல்லோருக்கும் வருவதுதான். குணமாகி அவர் மீண்டுவருவார்” என்று கூறினார் ஒரு பத்திரிகையாளர்.
2011 தேர்தலின்போது அனைத்து கட்சிகளாலும் ’மோஸ்ட் வாண்டட்’ பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது தேமுதிக. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த காலத்தில் பாமகவுக்கு எதிர் சக்தியாகவே இருந்தார். அக்கட்சி செல்வாக்காக இருந்த பகுதிகளில் புகுந்து பெரும் செல்வாக்கைப் பெற்றார். பாமக தன் பலத்தை இழந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது. பாமகவை சரியச் செய்தபின்னர், 2011 தேர்தலில் கேப்டனால் பாதிக்கப்பட்டது திமுகழகம். தன் திருமண மண்டபத்தை இடித்த திமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கச் செய்து பெரும் தோல்விக்குத் தள்ளினார். கறுப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த்தும் எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்ட ஜெயலலிதாவும் கைகோர்த்து பொது எதிரியான கருணாநிதியை வீழ்த்தினர். ஆனால் இந்த இரண்டு எம்ஜிஆர் ஆதரவாளர்களும் இணைந்து செயல்படவே முடியவில்லை. அதற்கான குணநலன் ஒத்திசைவு அவர்களுக்கு இல்லை. விஜயகாந்தை முதல்வர் ஜெ. வெற்றிக்குப் பின் கழற்றிவிட்டார்.
அதன்பின்னர் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவரும் கட்சி எம்.எல்.ஏக்களும் அப்படிச் செயல்பட முடியவில்லை. அனுபவம் வாய்ந்த திறமையான ஆட்களும் அவரை விட்டு விலகிவிட்டனர். அவ்வளவுதான் கேப்டனில் கப்பல் கவிழ்ந்தது; செல்வாக்கு இல்லாமல் போய்விட்டது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையில் அவர் பொதுநிகழ்ச்சிகளில் பேசுகையில் வாய்தவறி விடும் சொற்கள் அவரது பிம்பத்தைக் குலைத்திருக்கின்றன. ஆனால் இதை எதிர்கொள்ளவேண்டும் என்பதை கேப்டன் தரப்பும் உணர்ந்திருக்கிறது. சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவாக உலவும் கடிதம் அதற்கொரு உதாரணம். இப்ராஹிம் ராவுத்தரைப் போய் சந்தித்தது, வினுசக்கரவர்த்தியைச் சென்று பார்த்தது, கலாம் நினைவு நிகழ்ச்சியில் உணர்வுபூர்வமாகப் பேசியது, காஞ்சிபுரம் கட்சி நிகழ்ச்சியில் கட்சியினரைப் பார்த்து கண்ணீர் வடித்தது என்று அவர் கொஞ்சம் நேர்மறையான பாயிண்ட்களை சேர்த்துவருகிறார். இடையில் சுந்தர் பிச்சை பற்றி சொன்ன கருத்து மாதிரி சில சொதப்பல்களும் உண்டு.
இன்றைய சமூக ஊடக காலகட்டத்தில் கடவுளே ஆனாலும் கலாய்த்துவிடுவார்கள். தமிழ்நாட்டில் இந்த கிண்டலுக்கும் கேலிக்கும் தப்பிப் பிழைத்திருக்கும் ஒரே ஆள் தமிழக முதலமைச்சர்தான்! காரணம் வேறொன்றும் இல்லை. பயம்! எங்கே கட்சிக்காரர்கள் பிடித்து ‘செஞ்சிடுவாங்களோ’ என்ற பயம்! திமுக தலைவர் எதையும் தாங்குபவர்! அவருக்கு இணைய உலகில் எதிர்த்துக்கேட்க ஆதரவு ஆட்கள் இருக்கிறார்கள்! தன் பிம்பத்தை சரியாக வைத்துக்கொள்ளும் பொதுமக்கள் தொடர்புக்கலை, புகைப்படம், வீடியோக்களுக்கு போஸ் கொடுக்கும் கலை, பேட்டிகளுக்கு பதில் சொல்லும் கலை ஆகியவற்றில் சிறந்தவர் அவர்!
வைகோ உள்ளிட்ட மற்ற அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களில் கழுவி ஊற்றப்படுகிறார்கள் என்றாலும் கூட இவர்களையெல்லாம் விட பேவரைட் இடத்தைப் பிடித்திருப்பவர் விஜயகாந்த்!
“டிவிகளில் அவ்வப்போது சின்னதாக சம்பிரதாய கருத்துச் சொல்லும் பேட்டிகளிலேயே அவரது இமேஜ் டேமேஜ் ஆகிறது என்பது உண்மைதான். அதனால்தான் அவர் ஒரு புதிய தலைமுறை குணசேகரனுக்கோ, தந்தி டிவி பாண்டேவுக்கோ பேட்டிகள் கொடுப்பதைத் தவிர்க்கிறார்! ஆனால் அச்சுப் பத்திரிகை நிருபர்களுக்கு தனிப்பட்ட முறையில் நேர்காணல்கள் அளிப்பதைத் தவிர்ப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை” என்பது ஓர் அரசியல் விமர்சகரின் கருத்து. இத்தனைக்கும் பத்திரிகை பேட்டிகளால் ஆரம்பகட்டத்தில் வளர்ந்தவர் அவர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் இவர்.
இந்த ஐந்து ஆண்டுகளில் ஓர் எதிர்க்கட்சியாக தேமுதிக செயல்படாமல் போனதால் அவரது கட்சி கலைந்துவிட்டதா? செல்வாக்கு சரிந்துவிட்டதா?
இந்த கேள்விகள் அரசியல்வட்டாரங்களில் புன்னகையுடன் எதிர் கொள்ளப்படுகிறது. சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் அல்ல விஜயகாந்தின் வாக்குவங்கியினர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக இடம்பெற்றிருந்த பாஜக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதமே இதற்குப் பதில். இன்றைக்கும் திமுக தன் கூட்டணியில் தேமுதிகவைக் கொண்டுவர முயற்சிக்கிறது என்றால் குறைந்தது எட்டுசதவீத வாக்குவங்கி அவருக்கு இருக்கிறது என்றுதான் பொருள். அவர் கட்சி எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறாமல் போயிருக்கலாம். கட்சியின் நிர்வாகம், கட்டமைப்பு போன்றவற்றில் சரிவு இருக்கலாம். நிதி பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த கேலி கிண்டல்கள் செல்லமுடியாத ஆழத்தில் அவருக்கான வாக்கு வங்கி இருக்கிறது! இணையத்தில் கிண்டல் செய்பவர்களை முதலில் தேர்தலின்போது வாக்குச் சாவடிக்குப் போய் வரிசையில் நின்று ஓட்டுப்போடச் சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம் என்கிறார்கள்.
இப்போதைய அரசியல் நிலை எப்படி இருக்கிறது?
அரசியல் சூழல் மாறி இருக்கிறது. விஜயகாந்தின் எதிர்சக்தியான ராமதாஸ் இடத்தில் அன்புமணியும் கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலினும் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிப்பது விஜயகாந்த்துக்கு எளிதே அல்ல. அன்புமணி விஜயகாந்தை எதிர்ப்பதைப் பற்றி திட்டமிட்டுக்கொண்டிருககலாம். ஆனால் அவருக்கு நிஜமான சவாலாக இருக்கப்போகிறவர் பிரேமலதா! அவரும் பாமக செல்வாக்காக இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர். கேப்டனின் பின்னால் இருந்து ஆலோசனை கூறும் மந்திரியாக இருக்கின்றவரான சுதீஷ்தான் ஸ்டாலினின் அரசியல் வியூகங்களை எதிர்கொள்பவராகவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்துபவராக இருக்கிறார். இந்த நிலையில் வரும் தேர்தலில் விஜயகாந்த் எடுக்கப்போகும் அரசியல் முடிவு இன்னொரு பெரிய அரசியல் மாற்றத்தைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. அதற்கான சூழல்தான் நிலவுகிறது என்பதே அரசியல் கணிப்பாளர்களின் கருத்து.
சமீபத்தில் நெல்லைக்கு அருகே விசுவாமித்திரர் கோவிலில் கேப்டனின் பிறந்த நாளுக்கு யாகம் செய்யப்பட்டது. அது கேப்டனின் கோபத்தைக் கட்டுப்படுத்த என்று வெளியே சொல்லப்பட்டாலும் அவர் சமீபகாலங்களில் இழந்தவற்றைப் பெறுவதற்கான வழிபாடுதான் என்று கூறும் விவரமறிந்த ஒருவர், விஜயகாந்துக்கு பலமும் பலவீனமும் அவரது கோபம்தான். அது இல்லாவிட்டால் அவர் இல்லை! எனவே அவர் சாந்த சொரூபியாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவேண்டியதில்லை என்கிறார்!
விஜயகாந்தின் செயல்படாத தன்மையை, அவரது அரசியல் நிர்வாகப் பங்களிப்பின் குறையை விமர்சிப்போம்! ஆனால் இந்த விமர்சனம் வாட்ஸ் அப் ஜோக்குகளாக தரம் குறையக்கூடாது! பின்னர் நம் தரத்துக்கு ஏற்ற அரசியல் தலைமையையே நாம் பெறுவோம்!
செப்டெம்பர், 2015.